மேலாண்மை

இன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை இரவு. நேரம் ஏழரையை (கடிகார நேரத்தைச் சொன்னேன்) கொஞ்சம் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. பெங்களுருக்கே உரிய மிதமான ஆனால் நடுங்க வைக்காத குளிர் கொஞ்சிக் கொண்டிருந்தது. படுக்கையில் புரண்டு கொண்டிருந்த என்னை தூரத்தில் இருந்து வந்த பட்டாசுச் சத்தமும், மேள ஒலியும் தொந்தரவு செய்து எழ வைத்தன.

திப்பஸந்திரா  மார்க்கெட்டில் இன்று பிள்ளையார் சதுர்த்தி சிலைகளை கரைக்க எடுத்துச் செல்லும் நாள். அதுதான் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கும், சத்தங்களுக்கும் காரணம். "என்னடா, ஞாயிற்றுக்கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டேங்குறாங்க! வாரம் முழுக்க வேலைக்குப் போய், உதவாக்கரை மேலாளர்களுக்கு, 'நானும் வேலை செய்யுறேன்' அப்படின்னு நம்ப வைப்பதிலேயே பொழுது போயிடுது. ஒரு நாள் நிம்மதியா படுத்திருக்க கூட விட மாட்டேங்குறானுங்க" என்று சலித்துக் கொண்டே, பக்கத்திலிருந்த மடிக்கணினியை நெஞ்சு மேல் வைத்துக் கொண்டு ட்விட்டரை நோட்டம் விட்டேன்.

டிவிட்டரிலும் சில பெங்களூர் நண்பர்கள் என்னைப் போலவே சலித்துக் கொண்டிருந்தனர். என் பள்ளி நாட்களில், என் சொந்த ஊரில், கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டி, "செல்லாத்தா செல்ல மாரியாத்தா " என்று ஆடிமாசம் முழுக்க பாட்டு போடுவார்கள். ஒரு சிலருக்கு எல். ஆர். ஈஸ்வரி மேல கோபம் வரும் அளவிற்கு சத்தம் வைத்திருப்பார்கள். பள்ளி செல்லும் சிறுவனாக இருந்ததாலும், சொந்தமாக சம்பதிக்காததாலும் அப்போதெல்லாம் சகிப்புத் தன்மை அதிகம் இருந்தது. ஒலிபெருக்கிகாக யாரையும் திட்டத் தோன்றவில்லை அப்போது. வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சகிப்புத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து விட்டது. இறை நம்பிக்கை கூட அப்படித்தான். கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து இல்லாமலே போய் விட்டது. பள்ளிக்கூட பாடத்திட்டங்களில் "இறை மறுப்பு" பற்றி வைத்தால்தான் இந்த ஊர் திருந்தும் என்று திட்டிக் கொண்டே எழுந்து சாப்பிடக் கிளம்பினேன்.

பிள்ளையார் சிலைகளை இழுத்துச் செல்லும் ட்ராக்டர்கள் சாலைகளில் ஊர்ந்து கொண்டிருந்தன. எங்கள் பகுதியில் மூன்று சிலைகளை எடுத்து செல்வதாக ஏற்பாடு. சிலை என்று அவைகளை சொல்வது அத்தனை பொருத்தமில்லை. ஒவ்வொரு சிலையும் அட்டையால் செய்யப்பட பொம்மை. ஒவ்வொன்றும் சுமார் இருபதடி உயரம் இருக்கும். சாலையோரம் வளர்ந்து, சாலை அகலப்படுத்தும் பணிகளில் தப்பிப் பிழைத்த ஒரு சில மரங்களின் கிளைகள் பிள்ளையார் சிலைகளை இடித்து ஊர்வலத்தை ஊர்ந்து போகச் செய்து கொண்டிருந்தன. பின்னால், நீண்ட தூரத்திற்கு நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்தன. "ஊருக்கு ஒரு பெரியார் வரணுமடா உங்களுக்கெல்லாம்", என்று மனதுக்குள்  நினைத்துக்  கொண்டே உணவகத்துக்குள் நுழைந்தேன்.

ஒரு ஐந்து நிமிடம் போல் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்தால் ஊர்வலம் வெறும் பத்தடி போல்தான் நகர்ந்திருந்தது. வீட்டிற்கு உடனே போய் சாதிக்க ஏதும் இல்லாததால், தமிழர் வழக்கப்படி ஞே என்று பராக்கு பார்த்துக்கொண்டு நின்றேன் ஒரு ஓரமாக. நடைபாதை வியாபாரிகள் தங்களால் முடிந்த காசைக் கொடுத்து பிள்ளையாரை வேண்டிக் கொண்டார்கள். நிலநடுக்கம், குண்டுவெடிப்பு, போர்கள் என்று நாடே சிரமப்படுதே, இன்னுமா இந்த ஊர் கடவுளை நம்பிக்கிட்டிருக்கு என்று எனக்குள் இருக்கும் பகுத்தறிவாளன் சலித்துக் கொண்டான் , எப்போதும் போல.

வீட்டுக்குள் இருக்கும்போது தொந்தரவாய் தெரிந்த மேள சத்தம் இப்போது கொஞ்சம் இரசிக்கும்படி இருந்தது. கடவுளை கவனிப்பதை விட்டு மனிதர்களை கவனிக்கச் சென்றேன், மேளம் அடிக்கும் மனிதர்களை. இருபது-முப்பது வயது ஆண்கள் சுமார் பத்து பேர் கூடி நின்று ஆளுக்கொரு மேளத்தை அடித்துக் கொண்டிருந்தனர். அந்த கும்பலில் சற்றே வித்தியாசமாக, கிட்டத்தட்ட எழுபது வயது பெரியவர் ஒருவரும் மேளமடித்துக் கொண்டும் நடனம் ஆடிக் கொண்டும் இருந்தார். அவரை பேருந்தில் பார்த்திருந்தால், இருக்கையிலிருந்து எழுந்து உட்கார இடம் கொடுத்திருப்பேன், அத்தனை முதியவரை இருந்தார். 

இசையும் அந்த முதியவரும் என்னை ஈர்த்து விட்டதால் கொஞ்ச நேரம் அந்த ஊர்வலத்தின் அருகிலேயே நடந்து சென்றேன். அந்த முதியவரின் கையில் மிக மெல்லிய குச்சி ஒன்றும் ஒரு எடை குறைவான தப்பு ஒன்றும் இருந்தது. அந்த வயதுக்குரிய தளர்ச்சியோ சோர்வோ இன்றி அதீத சுறுசுறுப்புடன் ஆடிக் கொண்டிருந்தார். தன் கூட ஆடும் வாத்தியக்காரர்களை பார்த்து கழுத்தை ஆட்டிக் கொண்டே தாளத்தை அனுபவித்தார். பரதநாட்டிய கலைஞர் போல அவ்வப்போது விழிகளை விரித்து முகபாவம் எல்லாம் காட்டினார். தான் மட்டும் ஆடாமல் சாலை ஓரம் நின்று வேடிக்கை பார்த்த பாமரச் சிறுவர்களையும் தன் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டார். தன்னுடைய பட்டாபட்டியில் இருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து அந்த சிறுவர்களுக்கு பகிர்ந்தளித்தார். அப்படியே கொஞ்சம் கடலை, பட்டாணி என்றெல்லாம் விநியோகம் செய்து கொண்டே நடனம் ஆடினார். 

அவருடைய உற்சாகத்தை பார்த்த போது, தண்ணி போட்டு வந்திருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் நடை பிறழாமல் அவர் ஆடிய நேர்த்தியை பார்த்த போது அப்படி இருக்காது என்றே தோன்றியது. பக்கத்திலிருந்த ஜெயஸ்டீ பாரில் இருந்து சில குடிமகன்களும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் ஆட்டம் நம் தாத்தா தண்ணி போட்டிருக்க மாட்டார் என்று நம்ப வைத்தது. சமீபத்தில் திருமணம் நிச்சயமான ஒரு நண்பனின் முகத்தில், தொலைபேசி மணி ஒலிக்கும் போதெல்லாம் வரும் மகிழ்ச்சியை இந்த தாத்தாவின் முகத்திலும் காண முடிந்தது. என் நண்பன் தொலைபெசுவதில் காட்டும் ஆர்வம் உலகப் புகழ் பெற்றது. இந்த தாத்தா தன் தொழிலை அந்த அளவிற்கு நேசிக்கிறாரோ என்று வியக்க வைத்தது அவருடைய முதுமையிலும் தெரியும் முகப்பொலிவு. 

காலில் செருப்பு கூட இல்லாமல் அவர் ஆடுவதை கவனித்த நான், அப்போதுதான் அங்கு ஆடும் யாருமே காலில் எதுவும் அணியவில்லை என்பதை கண்டுபிடித்தேன். ஆடுவதற்கு சிரமமாய் இருக்கும் என்று கழற்றி விட்டார்களோ இல்லை சாமி முன்னால் செருப்பு போடக் கூடாது என்று கழற்றி விட்டார்களோ தெரியவில்லை. ஆனால் அத்தனை மோசமான சாலையில் ஆடும் போதும் ஒவ்வொரு முகத்திலும் தாத்தாவை பார்த்து பார்த்து பெருமிதம் அதிகமாகி ஆடிக் கொண்டே இருந்தனர். பின்னல் வரப்போகும் கூலிக்காக மட்டும் அவர்கள் ஆடவில்லை என்பது அவர்களின் ஈடுபாட்டில் தெளிவாகப் புரிந்தது. சுமார் இருபது நிமிடங்கள் அவர்களுடன் நடந்த பிறகு வீட்டிற்கு திரும்ப முடிவெடுத்தேன். அவர்கள் களைப்படைவதைப் போல் தெரியவே இல்லை. அந்த தாத்தாவின் உடற்தகுதி என் வகுப்பு தோழர் எவரையும் விட அதிகம் இருக்கும் என நினைத்துக் கொண்டே வீடு நோக்கி நகர்ந்தேன். 

என்னுடைய மேலாளர், சென்ற வாரம் நடந்த எங்கள் குழு கூட்டத்தில் (டீம் மீட்டிங் ), "நீங்கள் வேலையை பார்த்துக் கொள்ளுங்கள், நான் உங்கள் ஊதிய உயர்வை பார்த்துக் கொள்கிறேன்" என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். சம்பளப் பற்றாக்குறையின் காரணமாகவும், வெளியிலிருந்து ஆட்களை உயர் சம்பளத்துக்கு எடுத்து விட்டு உள்ளே இருப்பவர்களுக்கு பட்டை நாமம் சாத்தியதால் கடுப்பில் இருந்த ஊழியர்களுக்கு அவருடைய பேச்சு ஒரு உத்வேகத்தையும் அளிக்கவில்லை. 

கல்வியறிவில்லாத ஒரு நபர் தன்னுடைய வேலையை உத்வேகத்துடன் செய்வதை கண்டால், காண்போருக்கும் தங்களுடைய வேலையை அவரைப் போலவே பொறுப்புடன் செய்ய தோன்றுகிறது. ஆனால் மேலாண்மை, உளவியல் இதிலெல்லாம் வெள்ளைக்கார எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை படித்து விட்டு, அதைப் பேசி தொழில் ஆர்வத்தை கூட்ட ஒரு மேலாளர் முயன்றால் அது முடிவதில்லை. ஆயிரம் அறிவுரைகள் தராத தூண்டுகோலை ஒரு "செயல்" செய்துவிடும் என்பதை இது எனக்கு விளக்கியது.

சுற்றி இருப்போரை தூண்டுவது, தன் தொழிலை நேசிப்பது, சரியான கருவிகளை உபயோகிப்பது, பாராட்ட வேண்டியவர்களை பாராட்டுவது என ஒரு மேலாண்மை படித்தவர் செய்ய வேண்டிய அத்தனையும் அந்த தாத்தா செய்ததும், அவர் முகபாவத்தை கூட-ஆடியவர்களும் இதர கலைஞர்களும் கூர்ந்து கவனித்ததும், தன் ஆடல் மூலம் பதிலிறுத்ததும், 

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லாற் பெறின்

என்ற வள்ளுவரின் குறளை நிரூபித்தது. இந்த குறளில் "வல்லாற்" என்ற சொல்லை மட்டும் பலர் மறந்து விடுகின்றனர். நமக்கு தேவையான தூண்டுதல்கள் / முன்மாதிரிகள் எல்லாம் நம் கண் முன்னே சாதாரண மனிதர்களாகவே இருக்கின்றனர். இதை எல்லாம் விட்டு விட்டு நாம் பல இலட்சம் செலவு செய்து மேலாண்மை பட்டம் வாங்கி, மேலாளராக வேண்டும் என காலத்தையும் பொருளையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். 

இப்போது அந்த தாத்தா தந்த உத்வேகத்தில் கொஞ்சம் வேலை பார்க்க போறேன். அப்ப நீங்க ?

18 comments:

sEtHu said...

மிகவும் அர்த்தமுள்ள / நடைமுறையில் காணும் விஷயங்களின் வலைபதிவு !!

Sankar said...

@sethu: நன்றி :)

செழியன் said...

அருமையான பதிவு நண்பரே. என்னை போன்று படித்து முடித்துவிட்டு இப்பொழுது வேலைக்கு செல்ல இருக்கும் நண்பர்களுக்கு நீங்கள் மறைமுகமாக சொன்ன இந்த பதிவின் அர்த்தம் புரிந்தால் மிகவும் நலம்.நான் புரிந்து கொண்டேன். மேலும் நல்ல படைப்புகள் படைக்க வாழ்த்துகள் :)

Sankar said...

@செழியன்: நன்றி :)

priyakathiravan said...

Good.

Sankar said...

@priyakathiravan: Thanks :)

Sankarlal's Thoughts said...

Very good... nicely written :-)

Sankar said...

@sankarlal: Thanks :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

nice post boss! thx to u & chokkan

Bala said...

அருமையான பதிவு ... பதிவு நடை மிகவும் யதார்த்தமாக இருந்தது..

Chandru said...

பாராட்டுக்கள் சங்கர். நல்ல பதிவு. நம் வாழ்க்கைகு தேவையான உந்துதலும் , தீர்வும் நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகளில் இருக்கின்றன அனால் நாம்தான் பயன்படுத்துவதில்லை அல்லது புரிந்துகொள்வதில்லை

Sankar said...

@balakumaran @bala @chandru: நன்றி

raddy said...

மிகவும் அருமையான யதார்த்தமான பதிவு.
மேலும் மேலும் உங்கள் பதுவுகளை தொடர்க

Sankar said...

@raddy: ரகு, மிக்க நன்றி :-)

my2cents said...

Good post Sankar. If at the end, you can also add the meanings of the words in the thirukural also it will make it more comprehensive.
Like what does niranthinithu and vallarh mean?

Sankar said...

@Senthil: Thanks. I will add proper explanations in my future posts. VallaaR meant "talented" people here.

vijayaragavan said...

Dear Sankar,
You have told me that you wont post anything in Tamil. Hadn't you?

Sankar said...

@vijayaragavan: No. When did I say that ? I probably would have said that I won't post Tamil blogs in linux planets, which I didn't do now also :)