தமிழகத்தில் கம்பிவழித் தொலைகாட்சி (கேபிள் டிவி) வந்த போது, நாள்தோறும் ஒரு தமிழ்ப்படம் பார்க்கலாம் என்ற ஆடம்பரம் கிடைத்தது. அதுவரை, வாரத்தில் ஒரு நாள் ஞாயிறு மட்டுமே தமிழ்ப்படம் பார்க்கக் கிடைக்கும். ஞாயிறு மதியங்களில் "மாநிலமொழித் திரைப்படம்" என்ற பெயரில் இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் இருந்தும் விருது பெற்ற ஒரு மொக்கை படத்தை ஒளிபரப்புவார்கள். அந்த விருது படங்களைப் பார்த்தால் உங்கள் ஞாயிறு மாலைக்கே உரிய மனஅழுத்தம் இன்னும் அதிகரிக்கும் அளவுக்கு சோகத்தைப் பிழிந்து இருப்பார்கள் அப்படங்களில். வீடு, பரீட்சைக்கு நேரமாச்சு என்று துன்புறுத்தும் படங்கள்தான் அதிகம். இயக்குநர் பாலா படங்கள் பார்த்தால் கிடைக்கும் அதே எரிச்சல்தான் இப்படங்களும் தரும். அப்போது விடிவெள்ளியாக சன்டிவியும், கேடிவியும் கிடைத்தன. சன்மூவிசு என்ற பெயரில் எப்போதும் படம் ஓடிக் கொண்டே இருந்தது. அதுதான் கேடிவியாக பெயர் மாற்றம் பெற்றது என்று நினைக்கிறேன். காய்ந்த மாடு கம்பங்காட்டைப் பார்த்தது போல, தமிழக மக்களும், மகிழ்ச்சியாக சன்டிவியின் தமிழ்மாலையை சூடிக் கொள்ளத் தொடங்கினர்.
அப்போது "விவி கிரியேசன்சு" (கிரந்தம் நீக்கப்பட்டிருக்கிறது) என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தினர் "நண்பர்கள்" என்ற திரைப்படத்தை எடுத்திருந்தனர். பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் ஏழை இளைஞன்; கொண்டாட்டம், ஆர்ப்பாட்டமான கல்லூரி வாழ்க்கை; என்று ஒரு மசாலா கதை. ஆனால் அந்த வயதில் மிகவும் பிடித்து இருந்தது. அப்படத்தில்தான் முதன்முதலில் விவேக் என்னும் நடிகரைப் பார்த்தேன். கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில், ஒடிசலான தேகத்தோடு, நன்கு சிரிப்பு வரவைக்கிறாரே என்று நினைத்தேன். ஒரு காட்சியில் நாகேசு அவர்களிடம், அவர் குடும்பத்தைப் பற்றிப் பேசி ஒரு sentimental காட்சியும் இருக்கும். அதில் அழுவது போல நன்றாக நடித்திருந்தார் என்று அப்போதே தோன்றியது. அதன் பின்னர், கேடிவியில் எப்போது "விவி கிரியேசன்சு" என்று பார்த்தாலும், "அடடே இன்று நண்பர்கள் படம்" என்று விவேக்கைப் பார்ப்பதற்கு ஆர்வமாகிவிடுவேன். இப்போது போல, என்ன படம் போடப் போகிறார்கள் என்பது அப்போதெல்லாம் முன்கூட்டியே தெரியாது.
1991ல் வெளிவந்த படம் நண்பர்கள். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. அதன் பின்னர், கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து, நான் கல்லூரியில் சேர்ந்த இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் மின்னலே திரைப்படம் வெளிவந்து சக்கை போடு போட்டது. அதுவரையிலும், விவேக் கல்லூரி மாணவராகவே நடித்துக் கொண்டிருந்தார். பிரசாந்துடன் இணைந்து வேளாண் கல்லூரி மாணவராக "கோபாலகிருshணா" என்று தன் கல்லூரி ஆசிரியரை பெயர் சொல்லி விளிக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சியில் நடித்திருந்தார். அதே திரைப்படத்தில், "கதை சொல்லுகிறேன்" என்று ஒரு நகைச்சுவைக் காட்சியும் இருக்கும். இவையெல்லாம் சேர்ந்து கல்லூரி வாழ்க்கை என்றால் எப்படி இருக்கும் என்று மனத்தில் ஒரு எண்ணம் இருந்தது. கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே, எங்கள் துறைத்தலைவர், "சினிமாவில் இருப்பது போல எல்லாம் கல்லூரி இருக்காது" என்று அறிவுரை கூறி தெளிவுபடுத்திவிட்டார்.
இந்த இடைப்பட்ட காலத்தில், வி சேகர் படங்கள், பிரபு படங்கள், என்று பல குறு தயாரிப்பு (low budget) படங்களிலும் விவேக் தலை காட்டினார். சில படங்களில் வடிவேலு, தியாகு, குமரிமுத்து என்று பல நடிகர்களில் ஒருவராகவும் நடித்தார். மின்னலே படத்தின் மூலம்தான் அவரது "காலம்" தொடங்கியது என்று நினைக்கிறேன். வடிவேலுவும், விவேக்கும் கிட்டத்தட்ட 90களின் பிற்பகுதி, 2000களின் முற்பகுதியில்தான் தமிழ் நகைச்சுவையை தங்களின் ஆளுமைக்குக் கீழ் கொண்டுவந்தனர். கவுண்டமணி செந்தில் வயது ஆனவர்கள் ஆனார்கள். மணிவண்ணன், உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களில் தனக்கென ஒரு இடம் உருவாக்கி இருந்தார். இவர்களிடம் இருந்து வடிவேலுவும், விவேக்கும் அடுத்த தலைமுறையைப் பிடித்தனர்.
எங்கள் வீட்டில், விகடன், குமுதம், கல்கி, குங்குமம் என்று வார/மாத இதழ்கள் நிறைய வாங்குவோம். அவற்றில் இருந்து, தொடர்கதைகள் வரும் பக்கங்களைக் கிழித்து தனியாக Bind செய்து நூலாக்கி வைத்திருப்போம். அப்படி ஒரு நாள் ஏதோ, கல்கி / சாண்டில்யன் கதை படித்துக் கொண்டிருந்தபோது, "விவேகானந்தன்" என்ற இளைஞர், பாலச்சந்தரின் பட்டறையில் சேர்ந்து, திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாக அவரைப் பற்றி ஒரு பெட்டிச் செய்தி, அவரது புகைப்படத்தோடு வந்திருந்தது. பார்த்தவுடன் "அட நம்ம விவேக்" என்று ஏதோ எனக்குத் தெரிந்தவரைப் பற்றி எழுதி இருப்பதைப் போல ஆர்வமுடன் அதனைப் படித்தேன்.
காக்ககாக்க, தூள் வந்த நேரம், விகடன் / குமுதம் எதிலோ நடிகை Jothika அவர்களின் பேட்டி வந்திருந்தது. "உலகின் செக்சியான ஆண் யார் ?" என்ற கேள்விக்கு "விவேக்" என்று அவர் பதிலளித்து இருந்தார். அதற்கு அடுத்த வார இதழில், விவேக் இது பற்றி ஒரு கடிதம் எழுதி இருந்தார். தூள், டும்டும்டும் திரைப்படங்களின் PR க்காக கூட இது நடந்திருக்கலாம். ஏனென்று தெரியவில்லை, ஆனால் இன்றும் அந்த கேள்வி பதில் நினைவில் உள்ளது.
மற்றொரு முறை, மீண்டும் ஒரு வார இதழ் பேட்டியில், விவேக் தன் இளமை / கல்லூரி கால அனுபவங்கள் குறித்துப் பேசி இருந்தார். தன் கவிதைகள் சிலவற்றையும் பகிர்ந்து இருந்தார். ஒரு கோவைப்பெண் தன் காதலனைக் குறித்து எழுதியதாக "ஏனுங்கோ நீங்க தேனுங்கோ" என்று பகிர்ந்து இருந்தார். அப்போதுதான் கல்லூரிக்காக, கோவைக்கு வந்து சேர்ந்த எனக்கு, இந்த வட்டார வழக்கில் இயற்றப்பட்ட குறுங்கவிதை வெகுவாக ஈர்த்தது. அதே பேட்டியில், தன் இளமைக்கால புகைப்படத்தைப் பகிர்ந்து "எப்படி, அறிவாளி மாதிரி லுக் விடுறேனா" என்று தன்னைத்தானே பகடி செய்து கொண்டிருந்தார். அவரை வெறும் நகைச்சுவை நடிகராக மட்டும் பார்க்காமல் அறிவார்ந்த கலைஞராகவும் அப்போதில் இருந்து பார்க்கத் தொடங்கினேன்.
என் கல்லூரி வாழ்க்கையும், விவேக் திரைப்பட வளர்ச்சியும் ஒன்றாக அமைந்தன. மின்னலே, தில், தூள், ரன், டும்டும்டும், விசில், பார்த்திபன் கனவு, ரோjaக்கூட்டம் என்று பல படங்களில் திறமை காட்டினார். யுனிவெர்சிட்டி என்று ஒரு மொக்கை படம் அவருக்காகவே பார்த்து இருக்கிறேன். தென்காசிப்பட்டணம் என்ற திரைப்படத்தில் இரண்டு நாயகர்கள் இருந்தாலும், இன்றளவும் அது விவேக் படம் என்றே நினைவில் இருக்கிறது.
ஆசையில் ஒரு கடிதம் என்று பிரசாந்த்; யூத், தமிழன், திருமலை, பிரியமானவளே, பத்ரி, குருவி என்று இளைய தளபதி; வாலி, காதல் மன்னன் என்று தல என்று அக்கால பெரும் நடிகர்கள் அனைவரோடும் நடித்தார். பின்னர் Rajniக்கே மாமாவாக Sivajiயிலும் நடித்தார். அதில்லாமல் விக்ரம், சூர்யா, பிரபுதேவா போன்றோருடனும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் கார்த்தி, தனுசு வரை நடித்து இருக்கிறார். அமேசான் பிரைமில் அடிக்கடி "காshமோரா" திரைப்படம் பார்ப்பேன், மிகவும் பிடித்த படம். அருமையாக நடித்து இருப்பார். Rajni, Vijai, Dhanush என்று எந்த நடிகருடன் நடித்தாலும் அவர்களுடன் அருமையான Chemistry அவருக்கு உண்டு. இளையதளபதியும் இவரும்தான் எனக்குத் தெரிந்து சிறந்த நாயகன்+நகைச்சுவை சோடி நான் பார்த்த காலத்தில்.
மூட நம்பிக்கைகளை எதிர்த்து திரையில் பகுத்தறிவை வளர்த்ததில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. திகவே அழைத்து விருது வழங்கியது. கலைஞருக்கும் மிகப்பிடித்த நகைச்சுவை நடிகர். மின்னலே திரைப்படத்தில், ஒரு காட்சியில், லாரிக்கு அடியில் விழுந்துவிடுவார். அங்கே எலுமிச்சை கட்டி இருக்கும், "உள்ளுக்குள்ள 750 spareparts இருக்குடா, அதில் ஓடாத லாரியா இதில் ஓடப் போகுது ? " என்று பகுத்தறிவு உரையாடல்களை பொருத்தி இருப்பார். என் கல்லூரி துறைத்தலைவர் (HoD) அவர்களுக்கு மிகவும் பிடித்த உரையாடல் இது.
விவேக்கைப் பற்றி பேசி விட்டு மரம் வளர்ப்பதைப் பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும் ? அப்துல் கலாம் சொன்ன ஒற்றைச்சொல்லில் கோடி மரம் வளர்ப்பு என்ற குறிக்கோளை ஏற்றுக் கொண்டு அயராமல் உழைத்தார். திரைப்படம் தாண்டி, அவருக்கு மெய்யாகவே இயற்கை மேல் ஒரு காதல் இருந்தது. படைப்பாளிகளுக்கே உரிய மென்மனம் இருந்தது. யாரிடமும் பெரிதாக சண்டைக்கெல்லாம் போகாமல் அமைதியாக வாழப் பழகி இருந்தார். ஒரேயொரு முறை பத்திரிக்கையாளர்களிடம் சண்டை வந்தது. என்றாவது நேரில் பார்த்தால், அதைச்செய்திருக்கக்கூடாது என்று அவரிடம் வேடிக்கையாக நான் சண்டை பிடிக்க வேண்டும் என்று கூட நினைத்திருந்தேன்.
விவேக்கின் நடிகர், மரம் வளர்ப்பாளர் என்ற முகங்கள்தான் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் / மேடைப்பேச்சாளர். இசைப்புயல் ரகுமான் அவர்களை ஒரு முறை பேட்டி எடுத்து இருந்தார். எனக்குத் தெரிந்து, ரகுமான், மிகுந்த சிரிப்போடு, நன்கு உரையாடி கொடுத்த ஒரே பேட்டி அதுதான். ஆசுக்கர் விருது பெற்ற பின்னர் வந்தது என்று நினைவு. விவேக்கின் இசை அறிவு பற்றி அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பியானோ வாசிக்கும் அளவு இசை கற்று இருந்திருக்கிறார். எத்தனை நடிகர்களுக்கு இப்படி பன்முகத்திறமை இருக்கும் என்று தெரியவில்லை. அதில்லாமல் "பிரபுதேவா" அவர்களை அறிமுகப்படுத்த "எங்களுக்கெல்லாம் ஆண்டவன் எலும்பை வைத்து படைத்திருக்கிறான்; spring, rubber எல்லாம் வைத்து ஒருவரைப் படைத்து இருக்கிறார் அதுதான் பிரபுதேவா" என்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார். மிக "formal" ஆக இல்லாமல் இயல்பான நகைச்சுவையை அவரால் தன் பேச்சுக்களில் கொண்டு வர முடிந்தது. வைரமுத்து, கலைஞர், கமல் என்று பலரைப் பற்றியும், அவர்கள் இருக்கும் மேடைகளிலேயே, லேசாகச் சீண்டி கிண்டல் செய்ய அவரால் முடிந்தது. இயக்குநர் சங்கரிடம் நல்ல நட்புணர்வு கொண்டிருந்தார், "எந்திரன்" அறிமுக விழா கூட அவர்தான் நடத்தினார். இது மட்டும் அல்லாமல், வைரமுத்து, கலைஞர், பிரபு போன்றோரைப் பற்றி பேசினாலே அவர்கள் போலவே மிமிக்கிரியும் செய்வார்.
சந்தானம் போன்ற இளைய தலைமுறை நகைச்சுவை நடிகர்களிடம் பொறாமை இல்லாமல் பழகி இருக்கிறார். இதில் வடிவேலுவை விட உசத்தி. அதனால்தானோ என்னவோ, அவருக்கு "செல்முருகன்" என்ற நல்ல ஆயுள்கால நண்பன் வாய்த்தார். கிரேசிமோகனுக்கு ஒரு மாது கிடைத்ததுபோல, விவேக்குக்கு ஒரு செல்முருகன் என்று பலமுறை நினைத்து இருக்கிறேன். சில நட்புகள் + உறவுகள் புரிதலுக்கு அப்பாற்பட்டவை.
என் நண்பர் நிகாந்த் அவர்கள் இருமுறை "வடிவேலு பிடிக்குமா விவேக் பிடிக்குமா" என்ற வகையில் டுவிட்டரில் ஒரு கேள்வி எழுப்பினார். அப்போது நான் சொன்னது, "வடிவேலு உடல்மொழி மூலம் நகைச்சுவை செய்பவர். விவேக்கால் அதுவும் செய்ய முடியும், அறிவுடன், கூர்மையான கருத்துகளையும் நகைச்சுவையாக சொல்லவும் முடியும். அதனால், விவேக்கே ஒப்பீட்டளவில் திறமையானவர்" என்பது போல பதில் அளித்து இருந்தேன்.
கோவிட் lockdown எல்லாம் வந்தபோது, போண்டா மணி, கொட்டாச்சி போன்ற நகைச்சுவைக் கலைஞர்களுக்காக எதோ யூடியூப் அலைவரிசையில் வந்து பணம் திரட்ட முயன்றார். இதெல்லாம் செய்யத் தேவையே இல்லை ஆனால் பொதுநலம் அவரின் மனத்தில் இருந்தது. சொந்த வாழ்வில் சோகங்கள் இருந்தாலும், நல்லவராகவும், இயல்பிலேயே நகைச்சுவை உணர்வுள்ளவராகவும் வாழ்ந்தார். கிரேசிமோகன் போலவே, காலம் திடீரென்று அவரைப் பறித்துக் கொண்டுவிட்டது. அதிகம் சிரமப்படாமல் உடனே போய் விட்டார். போய் வாருங்கள் விவேக். வாலி, நாமுத்துக்குமார் ஆகியோருக்குக் கொடுத்தது போல உங்களையும் நேரில் பார்க்காமலேயே விடை கொடுக்கிறேன். ஒரு முறை பார்த்து பேசி இருந்திருக்கலாம்.