Saturday, April 21, 2018

Engeyo Partha Mayakkam - Yaaradi Nee Mogini

கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்னும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் வரிசையில், மேற்சொன்னவர்களுக்கு அடுத்த இடம் கொண்டவர் திரு நா முத்துக்குமார் அவர்கள். "ஒவ்வொரு பூக்களுமே" பாடலுக்கு இந்திய அரசின் விருது கிடைத்த போது, இவருக்கு இன்னும் கிடைக்கவில்லையே என்று வருந்தினேன். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வாங்கினார் பின்னாளில். இதனைப் பாராட்டி வெண்பாவெல்லாம் எழுதினேன் எனது முகநூலில். என்றாவது ஒரு நாள் நேரில் பார்த்தால் காட்டலாம் என்று இருந்தேன்.


இவர் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருந்தாலும், யுவன்சங்கர்ராஜா உடன் பணியாற்றிய பாடல்கள், அக்காலத்தைய இளைஞர்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றவை.


இயக்குநர் செல்வராகவன் திரைக்கதையில் ஒரு பொது அம்சம்: ஒரு உதவாக்கரை நாயகன் இருப்பான், வீட்டில் உட்பட யாரும் மதிக்க மாட்டார்கள், எங்கிருந்தோ தேவதை போல ஒரு பெண் வருவாள், நாயகன் அவளுக்காகத் திருந்தி முன்னேறுவான். "யாரடி நீ மோகினி" படத்திலும் இதே கதை அமைப்பு உண்டு. அப்போது நாயகன், நாயகியை முதல் முறை, கண்டதும் காதல் கொண்டதும், பின்னணியில் ஒலிக்கும் பாடல், நாமு வரிகளில் "எங்கேயோ பார்த்த மயக்கம்". அநேகமாக, பாடல் வரிகள் எழுதி விட்டு பிறகு மெட்டு அமைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த பல வரிகள் கொண்ட பாடல், குறிப்பாக, "இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறது" என்ற வரி. இந்தப் பாடலுக்கு என் வரிகளை, அதே காட்சிக்கு (Song Situation) பொருந்துமாறு, ஏதோ எனக்கு வந்த வரை எழுதி இருக்கிறேன். மெட்டோடு இயைந்து ஒலிக்கும் சொற்கள். கூடவே பாடிப் பாருங்கள்.

இந்தத் திரைப்படம் தெலுங்கில் செல்வராகவன் திரைக்கதை எழுதிய படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, திரு ரகுவரன் அவர்களின் இறுதிப் படமும் ஆகும்.

பாடல் குறித்து, ஏதேனும் கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் (Comments) தெரிவிக்கவும். ஏதாவது வரி புரியவில்லை என்றாலும் கேட்கவும். நன்றி.


பாடலின் சுட்டி:
இப்பாடல் மெட்டுக்கு என் வரிகள்:

உன்னோடு வாழ விருப்பம்!
உன்நிழலில் கொண்டேன் கிறக்கம்!
உன்னைப் பார்த்த நாளில் இருந்தே,
நானும் கொண்டேன் காதல் மயக்கம்!
கண்களை நீ இமைக்கும்போது,
கூப்பிட்டாயென நம்பும் மனது.

என் தூக்கம் தூக்கிச் சென்ற பாவை,
என் ஏக்கம் ஏற்றி வைத்த பூவை,
இனி உனது நெருக்கம் எந்தன் தேவை,
உனக்கு அளிப்பேன் எந்தன் வாழ்வை!

கால்கள் முளைத்த தாமரைநீயே!
காற்றில் நகரும் ஓவியம்நீயே!

---
விழி கண்டேன் விழியே கண்டேன்
வழியை மறந்து உன்னைக் கண்டேன்
விழிகள் வழியே நீயும் நுழைய
வலியைக் கொடுக்கும் காதல் கொண்டேன்

கொண்டேன் கொண்டேன் காதல் கொண்டேன்
காற்றில் அலையும் காகிதம் போலே
கவலை இன்றி திரிந்த நானும்
கவிதைநூல் போல் காதல்கொண்டேன்

என்னோடு நீ, உன்னோடு நான்
மெய்யோடு மெய் கலந்திட வேண்டும்

பாடி வந்த தேவதை நீதான்
தேடி வந்த அடிமை நான்தான்
கூடி நாமும் வாழ வேண்டும்
ஓடிப் போவோம் உயிரே உடன்வா

-- (உன்னோடு வாழ விருப்பம்! ...)

இரவின் இருளைச் சிறைப்பிடித்து
அதை விழியில் அடைத்து வைத் தாளோ
நிலவின் குளுமையை எடுத்து
தன் குரலில் இணைத்துக் கொண்ட தேன்மொழியோ

சிறகொடிந்த பறவை ஒன்று
சிலிர்த்துக் கொண்டு எழுகிறது
விரலிடுக்கில் உலகைத் தூக்கிப்
பறந்து செல்ல விரைகிறது

பகலும் இரவும் உன்னை நினைத்து
பசியும் ருசியும் மறந்து இளைத்து
நினைவைப் பிழிந்து கவிதை வடித்து
மனதை எடுத்து உனக்குக் கொடுத்து ...

... உன்னோடு வாழ விருப்பம்!


பிகு 1: ஏற்கனவே ஒரு முறை வேறொரு பாடலுக்கும் இப்படி ஒரு முயற்சி எடுத்திருக்கிறேன்.
பிகு 2: இந்த பாடல் வரிகளை நீங்கள் பாடுவதற்கோ, வேறு வியாபார நோக்கங்களுக்கோ வேண்டுமெனில் தாராளமாய் பயன்படுத்தவும். எனக்கு எந்த சன்மானமும் இதற்காக வேண்டாம் :) ஆனால் ஒரு அஞ்சல் அனுப்பி விட்டீர்கள் என்றால் மகிழ்வேன். இது CreativeCommons Zero License அடிப்படையில் உலகுக்கு அளிக்கப்படுகிறது. 

விவேக்